கல்வராயன்மலை சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான்

கல்வராயன்மலை சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான். அவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்

Update: 2021-11-07 17:30 GMT
கச்சிராயப்பாளையம்

பள்ளி மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். இவரது மகன் சுரேஷ்(வயது 11). இவன் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்த நிலையில் சுரேஷ் மற்றும் அவனுடைய நண்பர்களான நாச்சியப்பன் மகன் பூமிநாதன்(22), சிவகுமார் மகன் வெங்கடேஷ்(17), ஏழுமலை மகன் சதீஷ்(11) ஆகியோர் நேற்று காலை 2 மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கல்வராயன் மலைக்கு வந்தனர். 

வழுக்கி விழுந்தான்

பின்னர் இவர்கள் அங்குள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது சுரேசை கரையோரத்தில் உட்காரவைத்துவிட்டு பூமிநாதன், வெங்கடேஷ், சதீஷ் ஆகிய 3 பேரும் குளிப்பதற்காக நீர்வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். 
அப்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதை பார்த்ததும் கரையோரத்தில் உட்கார்ந்திருந்த சுரேஷ் நீர் வீழ்ச்சியில் குளிக்க ஆசைப்பட்டான். உடனே அவன் எழுந்து நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள கல்லில் வழுக்கி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

தீயணைப்பு வீரர்கள்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் எழுப்பினர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்களும், கரியாலூர் போலீசாரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன் சுரேசை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்ற ஆண்டும் இதே போல் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்த புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 2 நாட்களுக்கு பிறகு இறந்த நிலையில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எனவே மழைக்காலங்களில் நீர் வீழ்ச்சிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டும் என்பதால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்