வேலூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. விடிய விடிய பொதுமக்கள் தவிப்பு

தொடர் மழை, சதுப்பேரி ஏரி உபரிநீர் காரணமாக வேலூர் கன்சால்பேட்டை, திடீர்நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

Update: 2021-11-07 17:26 GMT
வேலூர்

தொடர் மழை, சதுப்பேரி ஏரி உபரிநீர் காரணமாக வேலூர் கன்சால்பேட்டை, திடீர்நகர், முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்து தண்ணீரை உடனடியாக வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.

வீடுகளுக்குள் புகுந்த   வெள்ளம்

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதேபோன்று ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் பாலாற்றங்கரையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. 

சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு காரணமாக கொணவட்டம், திடீர்நகர், கன்சால்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை கடந்த 3-ந் தேதி சூழ்ந்தது. அதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி, வருவாய்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கு மேல் வெளுத்து வாங்கியது. இந்த மழையாலும் சதுப்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீராலும் கொணவட்டம், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், திடீர்நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.
 தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 

வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பலர் தூக்கமின்றி விடிய, விடிய காத்திருந்தனர். குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

கலெக்டர் ஆய்வு

அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று காலை கொணவட்டம், திடீர்நகர், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் நிக்கல்சன் கால்வாயை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொணவட்டத்தில் உள்ள தெருக்கள் வழியாக சதுப்பேரி ஏரி உபரிநீர் சென்று வீடுகளை சூழ்ந்து நின்றது. பொக்லைன் எந்திரம் மூலம் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர், அப்பகுதி மக்களிடம் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகே உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர், பொய்கை மோட்டூர் பகுதியில் பாலாற்று நீர்வரத்து கால்வாயை ஆய்வு செய்தார். அங்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்கு நீர்செல்வதை தடுக்க மணல் மூட்டைகள் மூலம் தடுப்பணை அமைத்து மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
ஆய்வின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்