அரக்கோணம் அருகே மழையால் குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
மழையால் குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன
அரக்கோணம்
அரக்கோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்தசில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் அரக்கோணம் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள குடிசை வீடுகளின் மண் சுவர்கள் வலு விழந்து வருகின்றன.
இந்தநிலையில் அரக்கோணத்தை அடுத்த புதுகேசாவரம் கிராமத்தில் வசிக்கும் மரகதம் என்பவருடைய ஓட்டு வீட்டின் ஒருபக்க மண்சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் புளியமங்கலம் கிராமம் ஸ்ரீராம்நகரை சேர்ந்த ரேணுகாவின் குடிசை வீடு, கீழ்ப்பாக்கம் கிராமம் சர்ச் தெருவைச் சேர்ந்த டெய்சி, எலிசபெத் ஆகியோரின் குடிசை வீடுகளின் ஒரு பகுதி மண் சுவர் இடிந்து விழுந்தது. மழையால் குடிசை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, எனக் கிராம மக்கள் தெரிவித்தனர்.