வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி; வாலிபர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-07 17:16 GMT
விழுப்புரம், 


திண்டிவனம் அருகே தீவனுார் கிராமத்தை சேர்ந்தவர்  முருகன் (வயது55).  நாட்டு மருத்துவம் செய்து வருகிறார். இவருக்கு, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில், இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முருகன், ராஜேந்திரனுடைய வீட்டில் கடந்த 10-ந்தேதி இருந்தார். அப்போது அங்கு வந்த வசந்தபுரம் பகுதியை சேர்ந்த மன்னன் மனைவி பரிமளம் என்பவர்,  கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜேஷ்கண்ணன் (34) என்பவரை அழைத்து வந்துள்ளார். 

அவர், தனக்கு கூட்டுறவு துறையில் உயர் பதவியில் உள்ளவர்கள் ரொம்ப பழக்கம் என்றும், பலருக்கு கூட்டுறவு துறையில் பணி வாங்கி தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பி, ராஜேந்திரன் தனது மருமகன் பாலாஜிக்கு வேலை வாங்கி தருமாறு கூறி ரூ.50 ஆயிரம் ராஜேஷ்கண்ணாவிடம் கொடுத்துள்ளார். இதன் பின்னர் பாலாஜி ராஜேஷ் கண்ணனின்  வங்கி கணக்குக்கு ரூ.4 லட்சம் வரை போட்டுள்ளார்.

ரூ.34 லட்சத்து 40 ஆயிரம் மோசடி

 இதேபோல்,  முருகனும் தனது மகனுக்கு வேலை வாங்கி தரக்கோரி ராஜேஷ்கண்ணன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தையும், கொடியம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், மேல்பேரடிகுப்பத்தை சேர்ந்த கமல்தாஸ் என்பவர் 3 லட்சத்து 80 ஆயிரத்தையும், 

பஞ்சமாதேவி அகரத்தை சேர்ந்த பழனி மகன் அருள்பிரகாஷ் என்பவர் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 500-ம், திருவண்ணாமலை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பூபாலன் என்பவர் ரூ.8 லட்சமும், வந்தவாசி அருகே சாத்தூரை சேர்ந்த பிரதன் என்பரிடம் ரூ. 8 லட்சம் என்று மொத்தம் ரூ.34 லட்சத்து 40 ஆயிரத்து 500 பெற்று, அவர்களுக்கு வேலை ஏதும் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமலும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.


கைது

 இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள்  இருதயராஜ். ரவீந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ்கண்ணனை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்