தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது வீடூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-11-07 17:09 GMT
விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் வீடூர் அணை உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

தற்போது நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று அதிகாலை 31.5 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் இது தொடர்பாக அவ்வப்போது மாவட்ட கலெக்டர் மோகனிடம் தகவல் தெரிவித்தனர்.

தண்ணீர் திறப்பு

வினாடிக்கு 1,700 கன அடிநீர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, ஷட்டர் வழியாக உபரி நீரை திறந்து விட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். 

இதையடுத்து, சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர்  நேற்று காலை 6 மணிக்கு அணையின் 5-ம் மதகு வழியாக வினாடிக்கு 529 கன அடிநீர் சங்கராபரணி ஆற்றில் திறந்துவிட்டப்பட்டது. இதையொட்டி மீட்பு பணிக்காக தீயணைப்பு வீரர்கள், உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். வீடூர் அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 

அமைச்சர் ஆய்வு

இதற்கிடையே நேற்று காலை 10.45 மணிக்கு அணையை அமைச்சர் பொன்முடி் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வீடூர் அணை தூர்வாரும் பணிக்கு ஏற்கனவே ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. 

இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசன வாய்க்கால் புனரமைப்பு பணிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொடர் மழையால் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு  ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுதலைவர்கள் ஜனகராஜ், மலர்மன்னன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சர்க்கார் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், முன்னாள் தலைவர் ரவி, துணைத்தலைவர் சங்கர், ஊராட்சி செயலாளர் மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்