ஊட்டி தாவரவியல் பூங்காவை 41 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு

ஊட்டி தாவரவியல் பூங்காவை 41 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு

Update: 2021-11-07 17:00 GMT
ஊட்டி

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 41 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஊட்டியில் குவிந்தனர்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 4-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி நேற்று வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைகளின் அரசியான ஊட்டியில் பொழுதுபோக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

 கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது. 

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

அப்போது தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை தாவரவியல் பூங்காவுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 

41 ஆயிரம் பேர் வருகை

அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு தீபாவளி விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை கொரோனா பாதிப்புக்கு பின்னர் மேலும் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந் தேதி 9 ஆயிரத்து 736 பேர், 5-ந் தேதி 10 ஆயிரத்து 620 பேர், 6-ந் தேதி 12 ஆயிரத்து 921 பேர், நேற்று 8 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 4 நாட்களில் 41 ஆயிரத்து 777 சுற்றுலா வருகை தந்து உள்ளனர்.

 கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் 2-வது சீசன் களை இழந்து காணப்பட்டது. தற்போது 2-வது சீசன் முடியும் தருவாயிலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

இதை கருத்தில் கொண்டு மலர் மாடத்தில் மலர் பூந்தொட்டிகள் இன்னும் ஒரு வாரம் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகு இல்லத்துக்கு வருகை தந்தனர்.

மேலும் செய்திகள்