வந்தவாசி அருகே தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
வந்தவாசி அருகே யார் பெரியவர் என்ற போட்டியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வந்தவாசி
வந்தவாசி அருகே யார் பெரியவர் என்ற போட்டியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
யார் பெரியவர் என்ற போட்டி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் ஓசூரான் என்ற சுரேஷ் (வயது 21). சென்னை குன்றத்தூரில் வெல்டிங் வேலை செய்துவருகிறார். இவர் 2020-ம் ஆண்டு ஒரு குற்ற வழக்கில் சிறையில் இருந்தபோது, இதே பகுதியைச்சேர்ந்த விழுதுபட்டு கிராமம் வரதராஜன் மகன் சபரிநாதன் (21) என்பவருடன் சிறையில் நண்பர்களானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சபரிநாதனுக்கும், ஓசூரானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளிக்காக சொந்த ஊரான மேல்மா கிராமத்திற்கு ஓசூரான் வந்துள்ளார். இதை அறிந்த சபரிநாதன் நேற்று முன்தினம் இரவு அவரின் அடியாட்கள் 7 பேரோடு 4 இருசக்கர வாகனத்தில் மேல்மா கிராமத்திற்கு வந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அங்கு 8 பேரும் 2 பெட்ரோல் குண்டுகளை ஓசூரான் வீட்டில் வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீட்டின் முன்கதவில் பட்டு எரிந்துள்ளது. இது குறித்து தகவல அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சபரிநாதன் (21), வந்தவாசி செல்லப்பன் மகன் முருகன் (19), சந்திரசேகர் மகன் ரிஷிநாத் (19), கார்த்திகேயன் மகன் கிரி என்ற கிரிநாதன் (26), அப்ரார் அகமது மகன் முகமது ஆசீப் (24), தேசூர் சங்கர் மகன் துரைமுருகன் (23), தேத்துறை வேல்முருகன் மகன் அகஸ்டீன் என்ற தமிழ்செல்வன் (21), சென்னை வடபழனி ராஜி மகன் கார்த்திகேயன் (20) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
12 பேர் கைது
மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த தினேஷ், சக்திவேல், அன்பு, வசந்த் ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, 12 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.