ஜவளகிரி வனப்பகுதியில் 70 யானைகள் முகாமிட்டுள்ளன-விவசாயிகள் கவலை

ஜவளகிரி வனப்பகுதியில் 70 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-11-07 16:08 GMT
தேன்கனிக்கோட்டை:
ராகி பயிர்
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் இவற்றின் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ராகி பயிர் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பயிரை சுவைப்பதற்காக கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அதிகளவு ராகி பயிரிடப்பட்டுள்ளது. அவை தற்போது நன்கு வளர்ந்து ஒய்யாரமாக காட்சி அளிக்கிறது. இதனை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.
யானைகள் முகாம்
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70-க்கு மேற்பட்ட யானைகள் வெளியேறி, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்தன. அவை குட்டிகளுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து படிகலாளம், சாவரபத்தா, முதிகோர்தொட்டி ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
இந்த பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளிகளில் விவசாயிகள் அதிகளவு ராகியை பயிரிட்டுள்ளனர். இதனால் நன்கு விளைந்துள்ள பயிர்களை யானைகள் நாசம் செய்து விடுமோ? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கண்காணிப்பு
இதனிடையே வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ள யானைகளை ஜவளகிரி மற்றும் தளி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்துக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்