வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார்.
வேளாங்கண்ணிக்கு சென்றனர்
நாகை மாவட்டம் நாகூர் நாடன் பேட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்பாஸ்டின். இவருடைய மகன் எபிநேசர்(வயது24). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூாில் இருந்து தனது சொந்த ஊருக்கு எபிநேசர் வந்தார். சம்பவத்தன்று எபிநேசரும் நாகூர் பெருமாள் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் மகன் தனுஷ் (25) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு நாகை நோக்கி கிழக்கு கடற்கரை சாலயில் கருவேலங்கடை அருகே சென்று கொண்டிருந்தனர்.
பரிதாப சாவு
அப்போது நாகையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் எபினேசர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் எபிநேசர் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு . 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து எபிநேசர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி எபிநேசர் இறந்தார்.
தனுஷ் மற்றும் காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மகன் கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.