விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் வைகை அணை பூங்கா
விளக்குகள் எரியாததால் வைகை அணை பூங்கா இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.;
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக வைகை அணை விளங்குகிறது. இந்த அணையின் இரு கரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணை பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். இரவு 8 மணி வரை இயங்கும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கண்கவர் விளக்குகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். இந்நிலையில் தற்போது பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான விளக்குகள் எரியாமல் உள்ளது. இதன் காரணமாக மாலை நேரத்திலேயே பூங்கா இருளில் மூழ்கும் நிலை உள்ளது. மேலும் மாலை 6 மணிக்கே பூங்காவில் இருந்து சுற்றுலா பயணிகளை பொதுப்பணித்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். இதனால் பூங்காவை முழுமையாக ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுதவிர வைகை அணையில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த சிறுவர்கள் உல்லாச ரெயில் தற்போது கேட்பாரற்று உள்ளது. ரெயில் பெட்டிகள் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. எனவே பிரசித்தி பெற்ற வைகை அணை பூங்காவை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.