பக்தர்களுக்கு அனுமதி

அமணலிங்கேசுவரர் கோவிலில் தரிசனத்திற்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2021-11-07 13:40 GMT
தளி
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை  பெய்து வருவதால் அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அமணலிங்கேசுவரர் கோவிலில் தரிசனத்திற்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, பாம்பாறு, தேனாறு, சிற்றாறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையும் அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்கு உதவிப்பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமைக்கு தகுந்தவாறு தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
திருமூர்த்தி அணை
அதேபோன்று பலத்த மழையின் காரணமாக திருமூர்த்தி அணையும் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் பாலாற்றில் உபரிநீர் திறப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட பஞ்சலிங்க அருவி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.இன்று முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்