திருத்தணி அருகே குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவி சாவு
திருத்தணி அருகே குளத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகள் மகிதா (வயது 12). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து சில நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டது. நேற்று காலை மகிதா 2 மாடுகளை ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த வயல்வெளியில் மேய்க்க சென்றார். வெகுநேரம் ஆகியும் மகிதா வீட்டுக்கு திரும்பிவராததால் அவரது பெற்றோர் வயல்வெளிக்கு சென்று தேடிபார்த்தனர். அப்போது கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் மகிதா பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் மகிதா மாடுகளை மேய்க்க ஓட்டி சென்றபோது தவறி குளத்தில் விழுந்து இறந்தார் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.