மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் அவதி - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் அதனை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க.நகர்,
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலை மற்றும் அருகில் உள்ள தெருக்களில் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே மழைநீருடன் கலந்து நிற்கும் கழிவுநீரை அகற்றும்படி சென்னை மாநகராட்சி 73-வது வார்டு உதவி பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
ஆனால் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நேற்று மாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பிரகாஷ் ராவ் சாலை சந்திப்பு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்துவந்த புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணிநேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.