உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு; மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர்கள் சரி பார்த்து கொள்ளலாம்

சென்னை மாநகராட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சரி பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Update: 2021-11-07 05:14 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்க்க வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

இதையடுத்து வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலங்களில் உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடிகளை தெரிந்து கொள்ள வசதியாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அப்போது துணை கமிஷனர்கள் விஷூ மஹாஜன், டாக்டர் எஸ்.மனிஷ், மாநகர வருவாய் அதிகாரி சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில், ஆண் வாக்காளர்களுக்கு 278 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 278 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கு 5 ஆயிரத்து 266 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.அங்கு பொதுமக்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தை சரிபார்த்து கொள்ளலாம்.

இந்த தகவல் அனைத்தும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்