மோட்டார் வயரை திருடியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

திருமங்கலம் அருகே மோட்டார் வயரை திருடியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-11-07 04:27 GMT
திரு.வி.க. நகர்,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). கட்டிடத்தொழிலாளியான இவர், சென்னை திருமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முத்துக்குமார் மின்சாரம் தாக்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போலீசார், முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் உயிரிழந்த முத்துக்குமார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார் வயரை திருட முயன்றபோது, மின்சாரம் தாக்கி இறந்து போனது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்