மின் இணைப்பு பெட்டி சீரமைக்கப்படுமா? சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை வைஷ்ணவ கல்லூரி எதிரே அமைந்துள்ள ராதாகிருஷ்ணன் நகர் நடைபாதையில் சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் கால்வாய் புதிதாக அமைக்கப்பட்டது. அப்போது அங்குள்ள மின் இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. ஆனால் இதுவரையில் அந்த பெட்டி சீரமைக்கப்படாமல் வயர்கள் வெளியே தெரியும் வகையில் செல்கிறது. மழைகாலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டு விடக் கூடாது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். - சக்கரவர்த்தி, அரும்பாக்கம்.
வெளிச்சம் கிடைத்தது சென்னை வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பழுதடைந்து, இருள் மூழ்கி கிடக்கும் நிலை குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புதிய மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீண்டும் வெளிச்சம் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் சிரமம் சென்னை வியாசர்பாடி போலீஸ்நிலையம் எதிரே சத்தியமூர்த்தி நகர் செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை ரப்பீஸ் கொண்டு சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். -வாகன ஓட்டிகள். கழிவுநீரால் அவதி சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி அருகில் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலையில் (பஸ் ஸ்டாப் அருகில்) கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். - பொதுமக்கள், புளியந்தோப்பு. மின்கம்பத்தை மாற்ற வேண்டும் ஆவடி மாநகராட்சி பழைய அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் சிதிலம் அடைந்து, காங்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழை காலம் என்பதால் காற்று பலமாக வீசினால் இந்த மின்கம்பம் சாய்ந்துவிடும் நிலையில் மோசமாக இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரேமலதா, ஆவடி. போக்குவரத்துக்கு இடையூறு
சென்னை கொளத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை பகுதியில் சாலையையொட்டி வரிசையாக 4 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகளில குப்பை-கூளங்கள் நிரம்பி வழிந்து, சாலையிலும் சிதறி கிடக்கின்றன. இதனால் இப்பகுதி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டுடன் இருப்பதுடன் போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருக்கிறது. கால்நடைகளும் குப்பைகளை தூர்வாருகின்றன. எனவே இந்த குப்பைத் தொட்டிகள் போக்குவரத்து இடையூறு இல்லாத இடத்தில் வைத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். -தீபக், கொளத்தூர். பல்லாங்குழியான சாலை
சென்னை அடையாறு அருணாசலபுரம் மெயின் ரோடு பல்லாங்குழி போன்று குண்டும், குழியுமாக இருக்கிறது. எனவே இந்த சாலையில் கடும் சிரமத்துக்கு இடையே வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலைமை உள்ளது. மழைகாலம் என்பதால் இந்த சாலை இன்னும் மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். - பொதுமக்கள், அடையாறு. போதை ஆசாமிகள் அராஜகம் சென்னை எண்ணூர் பத்ரகாளி அம்மன் நகரில் வீடுகள் முன்பு போதை ஆசாமிகள் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். திறந்தவெளி பார் போன்று இப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை தெருவிலேயே வீசி சென்று விடுகின்றனர். இதுபற்றி தட்டிக்கேட்கும் பெண்களை மிகவும் ஆபாசமாக திட்டுகிறார்கள். போதை ஆசாமிகள் அராஜகம் எங்களுடைய நிம்மதியை சீர்குலைகிறது. எனவே போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தியும் கண்காணிக்க வேண்டும். - பொதுமக்கள், எண்ணூர். மலைப் போல் குவிந்துள்ள குப்பைகள் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம், அம்பத்தூர் செல்லும் வழியில் உள்ள சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடம் சுகாதார சீர்க்கேட்டில் சிக்கி தவிக்கிறது. அருகே உள்ள ஏரியின் சுற்றுச்சூழலையும் வெகுவாக பாதிக்கிறது. - பொதுமக்கள், திருவள்ளூர். மழைநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா? செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பாரதியார் தெருவில் பல ஆண்டுகளாக மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்து குளம் போல் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் விஷப்பூச்சிகள் படையெடுத்து வருகின்றன. மேலும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. மழைநீர் கால்வாயில் ஆங்காங்கே மண் கொட்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயை சீரமைத்து தருவார்களா? - பொதுமக்கள், பொத்தேரி. இணைப்பு வழங்கப்படாத மின் மாற்றிகள் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பூங்கா அருகே புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இணைப்பு வழங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மின் வாரியம் மேற்கொள்ளுமா? - பொதுமக்கள், குன்றத்தூர். குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணி 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு குப்பைத் தொட்டி வைத்தால் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும். எனவே தற்போது குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, இங்கு குப்பைத் தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். -சி.குமரவேல், ஐயப்பன்தாங்கல்.