நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 902 வாக்குச்சாவடிகள் அமைப்பு கலெக்டர் விஷ்ணு பட்டியலை வெளியிட்டார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 902 வாக்குச்சாவடிகள் அமைப்பு
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் 902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
உள்ளாட்சி தேர்தல்
நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. நெல்ைல மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல்
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்ட பிரிவினைக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளாக ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் வரைவு பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் உள்ள 370 வார்டுகளுக்கும், ஒவ்வொரு வார்டுவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 881 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 12 ஆயிரத்து 471 பெண் வாக்காளர்கள், 37 இதர வாக்காளர் என மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளர்கள் உள்ளனர். அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் தலா 21 வார்டுகள் உள்ளன. இங்கு 35 ஆயிரத்து 479 ஆண் வாக்காளர்கள், 37 ஆயிரத்து 883 பெண் வாக்காளர்கள், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 73 ஆயிரத்து 364 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 984 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 600 பெண் வாக்காளர்கள், 10 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 594 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 370 வார்டுகளில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 347 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சிகள்
மாநில தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் வரையில் மட்டுமே இருக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் தற்போது 902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 172 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 146 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 490 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 40 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கு 13 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 93 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
பேரூராட்சிகள்
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள மொத்தம் 17 பேரூராட்சிகளில் சேரன்மாதேவியில் 18 வார்டுகளுக்கு 18 வாக்குச்சாவடிகளும், ஏர்வாடியில் 15 வார்டுகளுக்கு 18 வாக்குச்சாவடிகளும், கோபாலசமுத்திரத்தில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், கல்லிடைக்குறிச்சியில் 21 வார்டுகளுக்கு 25 வாக்குச்சாவடிகளும், மணிமுத்தாறில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், மேலச்செவலில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், மூலைக்கரைப்பட்டியில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும்,
முக்கூடலில் 15 வார்டுகளுக்கு 17 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், நாரணம்மாள்புரத்தில் 15 வார்டுகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும், பணகுடியில் 18 வார்டுகளுக்கு 32 வாக்குச்சாவடிகளும், பத்தமடையில் 15 வாக்குச்சாவடிகளுக்கு 16 வாக்குச்சாவடிகளும், சங்கர்நகரில் 12 வார்டுகளுக்கு 12 வாக்குச்சாவடிகளும், திருக்குறுங்குடியில் 15 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடிகளும், திசையன்விளையில் 18 வார்டுகளுக்கு 25 வாக்குச்சாவடிகளும், வடக்கு வள்ளியூரில் 18 வார்டுகளுக்கு 29 வாக்குச்சாவடிகளும், வீரவநல்லூர் 18 வார்டுகளுக்கு 18 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பேரூராட்சிகளில் ஆண்கள், பெண்களுக்கு தலா 44 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கு 231 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குத்தாலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால் ஆகியோர் உடனிருந்தனர்.