தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது நெல்லை - ராதாபுரம் பகுதியில் சாரல் மழை
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது நெல்லை - ராதாபுரம் பகுதியில் சாரல் மழை;
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. ராதாபுரம் பகுதியில் சாரல் மழை பெய்தது.
நீர்வரத்து குறைந்தது
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1 வாரமாக பெய்தது. இந்த நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் மழை நின்று, வெயில் அடித்தது. இதனால் நெல்லையில் சாலைகளில் தேங்கி இருந்த மழை நீர் வடிந்துள்ளது.
மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், மழை குறைந்ததால் நேற்று நீர்வரத்து குறைந்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளித்தனர்.
ராதாபுரம் பகுதி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் நேற்றிரவு 9 மணி முதல் சாரல் மழை பெய்தது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 136.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,365 கனஅடியாகவும், வெளியேற்றம் 1,405 கன அடியாகவும் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 139.37 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 450 கனஅடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 21.50 அடியாக உள்ளது. அணைக்கு 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கொடுமுடியாறு அணை நீர்மட்டம் உச்சநிலையில் இருப்பதால் அணைக்கு வருகிற 60 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணைகள் நிரம்பின
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதையொட்டி கடனாநதி அணைக்கு வரும் 220 கன அடி தண்ணீர், ராமநதி அணைக்கு வரும் 50 கன அடி தண்ணீர், குண்டாறு அணைக்கு வரும் 42 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து 343 கன அடியாகவும், வெளியேற்றம் 371 கன அடியாகவும் உள்ளது.
அடவிநயினார் அணைக்கு நீர் வரத்து 25 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேர்வலாறு -1, அம்பை -4, சேரன்மாதேவி -1, மூலைக்கரைப்பட்டி -6, நெல்லை -1, கருப்பா நதி -1, சங்கரன்கோவில் -3,சிவகிரி -12.