கர்நாடகத்தில் மழலையர் பள்ளிகள் நாளை முதல் திறப்பு
கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து மழலையர் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு: கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து மழலையர் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மழலையர் பள்ளிகள் நாளை திறப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு கர்நாடக அரசின் தீவிர நடவடிக்கைகளும், கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதும் காரணமாகும். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது.
தற்போது கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகளும் (எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி) 8-ந் தேதி (நாளை) முதல் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்
அதன்படி அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் வருகிற திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பெங்களூரு, மைசூரு, தட்சிணகன்னடா, சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் அங்கன்வாடி, மழலையர்கள் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாணவ-மாணவிகள் இடைவெளி விட்டு அமர வைக்கவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அனுமதி கடிதம் கட்டாயம்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் நவம்பர் 8-ந் தேதி (நாளை) முதல் அங்கன்வாடிகள், எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படுகிறது. பெங்களூருவிலும் 8-ந் தேதியில் இருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரை நாள் மட்டுமே பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மழலையர் பள்ளிகள் திறக்கும் முன்பாக வகுப்பறைகளை கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். மழலையர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கண்டிப்பாக தங்களது பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் வாங்கி வருவது கட்டாயமாகும்.
2 டோஸ் தடுப்பூசி
பள்ளிகளுக்கு வரும் ஒவ்வொரு குழந்தைகளின் உடல் நலமும் முக்கியமானதாகும். அதனால் மிகுந்த பாதுகாப்புகளுடனும், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படியும் ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு பெற்றோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெற்றோரை தவிர்த்து வேறு யாரும் பள்ளிக்குள் செல்ல அனுமதி கிடையாது.
மழலையர் பள்ளிகளுக்கான சில வழிகாட்டுதல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர் மற்றும் உதவி ஊழியர் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமாகும்.
குழந்தைகள் பயன்படுத்தும்...
அங்கன்வாடி உள்பகுதிகளிலும், அங்கன்வாடியை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்து கொள்வதுடன், அடிக்கடி சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அங்கன்வாடியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.