பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில் விழாவில் ஆண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

தேவூர் அருகே நடந்த பாங்கிகாடு அய்யனாரப்பன் கோவில் விழாவில் ஆண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Update: 2021-11-06 21:45 GMT
தேவூர்
கோவில் விழா
தேவூர் அருகே பாங்கிகாடு பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்கள் கலந்து கொள்ளும் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த பொங்கல் விழா கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. 
இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொங்கல் வைப்பதற்கு மண்பானை செய்ய கடந்த 15 நாட்களுக்கு முன்பு மண் பூஜை செய்து மண்பாண்ட தொழிலாளர்களிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தேவையான மண்பானைகளை செய்து கொடுத்தனர். பின்னர் பொங்கல் விழா தொடங்கியது. 
ஆண்கள் பொங்கல் வைத்தனர்
இதையொட்டி ஆண்கள் விரதம் இருந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 
முன்னதாக சென்றாயனூர் பகுதியில் அய்யனாரப்பன் வீடு பதியில் இருந்து சாமி அழைத்தல், அரிசி எடுத்து செல்லுதல் போன்றவை நடந்தன. மேலும் பன்றி அழைத்து வருதல், கிடா வெட்டுதல், பூசாரி கத்தி மேல் நடந்து சென்று பன்றி பலியிடுதல் போன்ற நிகழ்வுகளும் நடந்தன. விழாவையொட்டி அய்யனாரப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பாங்கிகாடு, சென்றாயனூர், அக்கரைக்காடு, ஓடசக்கரை, புளியம்பட்டி, சித்தார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் முடி காணிக்கை செலுத்தி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் செய்திகள்