ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு சீரமைக்கும் பணியில் 100 பணியாளர்கள் தீவிரம்

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-11-06 21:45 GMT
ஏற்காடு
மலைப்பாதையில் மண்சரிவு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தீபாவளி விடுமுறையையொட்டி ஏராளமானோர் குவிந்தனர். இந்தநிலையில் அங்கு தீபாவளி அன்று கனமழை வெளுத்து கட்டியது. இதனால் அயோத்தியாப்பட்டணம் அருகே குப்பனூரில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இரவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதை மண், பாறைகளாக காட்சி அளித்தது. மேலும் மரங்களும் வேரோடு சரிந்து விழுந்ததால் சாலை சேதமடைந்தது. இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மீட்பு
மேலும் மண்சரிவில் சுற்றுலா பயணிகள் சிலர் சிக்கினர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று மண்சரிவில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக மண்சரிவால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
இந்தநிலையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அவர்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
3-வது நாளாக துண்டிப்பு
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். 12 பொக்லைன் எந்திரங்கள், 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருந்தாலும் ஏற்காட்டில் அடிக்கடி மழை பெய்து வருவதால் அவ்வப்போது மண்சரிவை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
ஓரளவு மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அந்த வழியாக ஏற்காடு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள் சேலம் அருகே மலை அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனிடையே மண்சரிவு முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் அங்கு நேற்றும் 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவு விரைவில் சீரமைக்கப்பட்டு அங்கு போக்குவரத்து தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்