கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
எடப்பாடி,
வாரச்சந்தை
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு எடப்பாடி, இடங்கணசாலை, தேவூர், அரசிராமணி, இளம்பிள்ளை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடுகள், கோழிகளை விற்பனை செய்ய கொண்டு வருவார்கள்.
நேற்று 4 ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரம் சேவல் மற்றும் கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.5 ஆயிரத்து 700 முதல் ரூ.6 ஆயிரம் வரையும், 20 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையும் விற்பனையானது.
ரூ.4 கோடிக்கு வர்த்தகம்
இதேபோல் பந்தைய சேவல்கள் தரத்திற்கு ஏற்றவாறு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.4,000 வரையும், கோழி ஒன்று ரூ.100 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் 100 டன் காய்கறிகளும் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. 60 கிலோ எடை உள்ள சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் மூட்டைகள் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலை போனது.
நேற்று ஒருநாள் மட்டும் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகளை வாங்க நேற்று ஏராளமானோர் சந்தையில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வியாபாரம் மும்முரமாக நடந்தது.