பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்ற முடிவு

இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருண்சிங் தலைமையில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.

Update: 2021-11-06 21:36 GMT
பெங்களூரு: இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருண்சிங் தலைமையில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.

இடைத்தேர்தலில் தோல்வி

கர்நாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இடைத்தேர்தல் தோல்வி காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பிற தலைவர்கள் மீது பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இடைத்தோ்தல் குறித்து ஆலோசிக்கவும், தோல்வி குறித்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட தலைவர் அருண்சிங் நாளை (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அவர், பெங்களூருவிலேயே 3 நாட்கள் முகாமிட்டு கட்சி தலைவர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நளின்குமார் கட்டீல் மீது அதிருப்தி

இந்த நிலையில், இடைத்தேர்தல் தோல்விக்கு பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தலைவர் பதவியில் இருந்து நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிடம் சிந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக பா.ஜனதா கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள், பிற தலைவர்களும் நளின்குமார் கட்டீல் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு மாநில தலைவராக நளின்குமார் கட்டீல் நியமிக்கப்பட்டாா். அதன்பிறகு, நடந்த இடைத்தோ்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த இடைத்தோ்தல்களிலும் எடியூரப்பாவின் பலத்தால் பா.ஜனதா வெற்றி பெற்றதாக தலைவர்கள் கூறுகிறார்கள். இதனால் இடைத்தேர்தல் வெற்றியில் நளின்குமார் கட்டீல் பங்கு எதுவும் இல்லை என்று பா.ஜனதாவினர் கருதுகின்றனர்.

கட்சியினர் குற்றச்சாட்டு

எடியூரப்பாவின் தலைமை இல்லாமல் நடந்த இடைத்தேர்தலில் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்திருந்தது. அத்துடன் ராகுல்காந்தி போதைப்பொருள் பயன்படுத்துவார் என்று நளின்குமார் கட்டீல் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் நளின்குமார் மாநில தலைவராக பதவி ஏற்றது முதல் சுயமாக எந்த ஒரு முடிவையும் அவர் எடுக்கவில்லை என்றும், டெல்லி தலைவர்களுடன் தான் கலந்து பேசி முடிவு எடுத்து வருவதாகவும் கட்சியினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும் கட்சியின் நிர்வாகிகளுடன் எந்த ஒரு பிரச்சினை குறித்தும் அவர் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் ஹனகல் தொகுதி தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு நளின்குமார் கட்டீலை பா.ஜனதா மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

இந்த நிலையில், நாளை பெங்களூருவுக்கு வரும் அருண்சிங் தலைமையில் வருகிற 9-ந் தேதி கர்நாடக மாநில பா.ஜனதாவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் நளின்குமார் கட்டீலை மாற்றுவது குறித்து முக்கிய தலைவர்களுடன், அருண்சிங் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், தலைவர்களின் கருத்துகளை கேட்டு, அதனை பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள வலுவான தலைவர் தேவை என பா.ஜனதா மேலிடமும் கருதுவதாக தெரிகிறது. குறிப்பாக நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாளியை தலைவராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் லிம்பாவளி தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். இதன் காரணமாக அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்