திருமணத்திற்கு மறுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்
சிவமொக்காவில் திருமணத்திற்கு மறுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வாலிபரை தாக்கிய இளம்பெண்ணின் தந்தை உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சிவமொக்கா: சிவமொக்காவில் திருமணத்திற்கு மறுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வாலிபரை தாக்கிய இளம்பெண்ணின் தந்தை உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கட்டிட ஒப்பந்ததாரர்
சிவமொக்கா டவுன் குருபுரா பகுதியை சேர்ந்தவர் இந்திர குமார். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், தரிகெரே தாலுகாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
திருமண நிச்சயம் முடிந்த நிலையில் இந்திர குமார் மணமகளின் தந்தையான ஜெயராமனிடம் திருமண செலவுக்காக ரூ.6.80 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்திரகுமாருக்கு, மணமகள், அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைள், பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை. இதனால் இந்திரகுமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து திருமண செலவுக்காக கொடுத்த ரூ.6.80 லட்சத்தையும் திருப்பி வாங்க முடிவு செய்தார்.
திருமணத்திற்கு மறுத்து...
அதன்படி இந்திரகுமார், தனக்கு நிச்சயமான இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இந்திரகுமார், பெண் மற்றும் அவரது பெற்றோர் முன்னிலையில் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றும், அதனால் தான் திருமண செலவுக்காக கொடுத்த ரூ.6.80 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.
இதனை கேட்டு இளம்பெண்-அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்திரகுமாரிடம், பெண்னின் தந்தை உள்பட 6 பேர் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து இந்திரகுமாரை, 6 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இந்திரகுமார் படுகாயம் அடைந்தார்.
6 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த இந்திரகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருேக உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில்,திருமணத்திற்கு மறுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இந்திரகுமாரை, பெண்ணின் தந்தை, உறவினர்கள் 6 பேர் தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து மணப்பெண்ணின் தந்தை ஜெயராம், யோகேஷ், பிரதாப் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.