தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89390 78888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-;
சுகாதார சீர்கேடு
மதுரை அகிம்சாபுரம் 6-வது தெருவில் செல்லூர் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைதீன், மதுரை.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
ராஜசேகர், அருப்புக்கோட்டை.
சாலை தேவை
மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு சாலை அமைப்பார்களா?
பொதுமக்கள், கோவிலாங்குளம்.
பஸ் வசதி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு காலை நேரத்தில் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ரோஷிணி, ஆலங்குளம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை வண்டியூர் 29-வது வார்டு சமயன்கோவில் தெருவில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பும், சாலையோரத்திலும் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவிந்த், வண்டியூர்.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
மதுரை மாவட்டம் திருநகர் பஸ் நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து பஸ் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை உடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அது எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான அந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
பொன்முத்து, மதுரை.
மழைநீர் அகற்றப்படுமா?
ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுரேஷ், ராமநாதபுரம்.
மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும்
சிவகங்கை கிராமப்பகுகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்யவேண்டும். மழைகாலம் என்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சுந்தரமூர்த்தி, சிவகங்கை.