ஓடும் பஸ்சின் மேற்கூரையில் ஏறி கீழே குதித்த வாலிபர்
மேலூரில் ஓடும் பஸ்சின் மேற்கூைரயில் ஏறி வாலிபர் ஒருவர் கீழே குதித்தார். இதை பார்த்து பயணிகள் அலறினார்கள்.
மேலூர்,
மேலூரில் ஓடும் பஸ்சின் மேற்கூைரயில் ஏறி வாலிபர் ஒருவர் கீழே குதித்தார். இதை பார்த்து பயணிகள் அலறினார்கள்.
பஸ்சின் மேற்கூரையில் ஏறிய வாலிபர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து மேலூருக்கு நேற்று காலை ஒரு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் மதுரை மாவட்டம் மேலூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள செக்கடி பஜாரில் வந்தது. அப்போது திடீரென்று 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பஸ்சின் பின்பக்க ஏணி வழியாக மேற்கூரை மீது ஏறி நின்றார். இது தெரியாமல் டிரைவர் பஸ்சை வழக்கம் போல ஓட்டினார். எந்தவித பிடிமானமும் இன்றி நின்றிருந்த அந்த வாலிபர் முன்னும், பின்னும் ஆடினார்.
இதை பார்த்து ரோட்டில் நின்ற மக்கள் சத்தம் போட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சின் மேற்கூரையில் நின்றிருந்த அந்த வாலிபர் ரோட்டின் குறுக்கே சென்ற வீடு, கடை, மின் இணைப்பு வயர்களை தூக்கி கைகளால் தூக்கி தள்ளினார்.
பயணிகள் அலறல்
பஸ் கண்டக்டர், டிரைவர் கீழே இறங்குமாறு அந்த வாலிபரிடம் சத்தம் போட்டனர். உடனே அந்த வாலிபர் பஸ்சின் முன்பக்கம் வழியாக கீழே குதித்தார். அந்த பின்னர் சர்வ சாதாரணமாக அவர் நடந்து சென்றார். இந்த காட்சிகளை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். பஸ்சின் மேற்கூரையில் வாலிபர் ஏறி ரகளை செய்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இதற்கிடையே பஸ்சில் இருந்து கீழே குதித்த வாலிபரை அப்பகுதியை சேர்ந்த போலீசார் அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
விசாரணையில் அந்த வாலிபர் மேலூர் அருகிலுள்ள சென்னகரம்பட்டியை சேர்ந்த தேவர் என்பவரது மகன் சதீஸ்குமார் (வயது 26) என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரது தந்தை இறந்ததால் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக சதீஸ்குமார் அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளிேய வந்த சதீஸ்குமார் ஓடும் பஸ்சில் ஏறி ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் மேலூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.