மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மின்வாரிய ஊழியர் பலி
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்துபோனார்.;
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). இவர் நிலக்கோட்டையில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர், அதே பகுதியை சேர்ந்த பிரபு, கார்த்திக் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு வந்துவிட்டு பூசாரிபட்டிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்டினார்.
வத்தலக்குண்டு-மதுரை சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வெங்கடாஸ்திரி கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (23) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வேல்முருகன் படுகாயமடைந்தார். மற்ற 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.