சொத்து தகராறில் தம்பி அடித்து கொலை

திருப்பத்தூரில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-06 17:53 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

நஷ்டம்

திருப்பத்தூர் டவுன் சிவனார் தெருவை சேர்ந்தவர் மணி.  இவரது மகன்கள் ரவீந்திரன் (வயது 52), பாஸ்கரன் (49). மணி இறந்துவிட்டார்.

 ரவீந்திரன் கிருஷ்ணகிரியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். 

கடை நடத்தியதில் பாஸ்கரனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ரவீந்திரன் பணம் தருகிறேன், கடையை தனக்கு தந்துவிடும்படி கேட்டுள்ளார். அதன்படி பாதித்தொகையை பாஸ்கரனுக்கு ரவீந்திரன் கொடுத்து, அந்த கடையை அவரது மகன்கள் நடத்தி வந்தனர். 

இதையடுத்து பாஸ்கரன் நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ேமலாளராக பணியாற்றி வந்தார். 

கடையை விற்ற வகையில் இருவரின் தங்கையான லதாவுக்கு பணம் தர வேண்டும் என கூறப்படுகிறது. 

அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று  இரவு பாஸ்கரன் பணத்தைக் கேட்டு கடைக்கு சென்றார். அப்போது பாஸ்கரனுக்கும், ரவீந்திரன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணுகுமார் (24), லால் விஷ்ணு (19), மற்றும் அவரது சித்தப்பா ஜெயவேல் (66), கிருஷ்ணகுமார், கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர் வான்விகிலன் (24) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதில் 5 பேரும் சேர்ந்து பாஸ்கரனை அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் பாஸ்கரன் அங்கேயே மயங்கி விழுந்தார். 

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாஸ்கரனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

இதுகுறித்து பாஸ்கரனின் தங்கை லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் ரவீந்திரன் மற்றும் அவரது மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சொத்து தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் மகன்கள் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்