ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ரூ.2.75 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், கண்ணன், ஏட்டு மணிவண்ணன் மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி சென்ற மினி லாரி சுங்கச்சாவடியில் வந்து நின்றது. சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரிடம் விசாரித்தனர். இதில், அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார்.
போலீசார் லாரியை சோதனை செய்ததில், கூரியர் பார்சலில் மூடியபடி 20-க்கும் மேற்பட்ட பண்டல்களில் 453 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், பெங்களூரு பகுதியை சேர்ந்த பிரேந்திரகுமார் என்பவரது மகன் விகாஷ்குமார் (வயது 29) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
போலீசார் லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விகாசை கைது செய்தனர்.