மோட்டார்சைக்கிள் ேஷாரூம் உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது

பைனான்ஸ் அதிபரை மிரட்டுவதற்காக காரில் வீச்சரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மோட்டார்சைக்கிள் ஷோரூம் உரிமையாளர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-06 17:16 GMT
 அரக்கோணம்

பைனான்ஸ் அதிபரை மிரட்டுவதற்காக காரில் வீச்சரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மோட்டார்சைக்கிள் ஷோரூம் உரிமையாளர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பைனான்சியர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52). பைனான்ஸ் அதிபர். திருத்தணியில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குமார் கடன் அளித்து வந்தார்.

வாகனம் வாங்கியவர்கள் செலுத்தும் கடன் தவணை தொகையை ஷோரூம் நிர்வாகத்தினர் குமாருக்கு அளித்து வந்தனர். 

ஆனால் கடந்த சில மாதங்களாக ஷோரூமில் இருந்து முறையாக தவணை வரவில்லை. அது குறித்து மோட்டார் சைக்கிள் ஷோரூம் நடத்தும் சகோதரர்களான சதாம் உசேன் (30) மற்றும் அப்துல் ரகுமான் (32) ஆகியோரை சந்தித்து குமார் கேட்டுள்ளார்.

அப்போது தகராறு ஏற்பட்டது. அதன்பின் குமார் அங்கிருந்து திரும்பி விட்டார்.

ஆயுதங்களுடன் சென்றனர்

இந்த நிலையில் குமார் மீது ஆத்திரம் அடைந்த அப்துல்ரகுமான், சதாம் உசேன் ஆகியோர் அவரை மிரட்டுவதற்காக அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு காரில ஆயுதங்ளுடன் புறப்பட்டுள்ளனர்.

 இதனை அறிந்த குமார் அது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து டவுன் போலீசார் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் சதாம் உசேன், அப்துல் ரகுமான் மற்றும் நிர்மல் (19), நவீன் (18) ராஜேஷ் (18) என 5 பேர் இருந்தனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பைனான்ஸ் வழங்கிய குமாரை தாக்க வந்தது தெரியவந்தது. காரை சோதனையிட்டதில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து சதாம்உசேன், அப்துல்ரகுமான் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்