வீடூர் அணை நீர்மட்டம் 30 அடியாக உயர்வு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வீடூர் அணை நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்ததை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி,
திண்டிவனம் தாலுகா வீடூரில் உள்ளது வீடூர் அணை. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலமாக, தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 ஏக்கர் விளை நிலமும், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசனம் பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்திருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 300 கனஅடி என்கிற நிலையில் உள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதை அடு்த்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம் ஆகியோர் அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் அணைப்பகுதிக்கு குளிப்பதற்காக பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுத்து வருகின்றனர்.
எச்சரிக்கை
அணை எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளவை எட்டிவிடும் என்பதால், அணையில் இருந்து உபரி நீர் சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றப்படும். எனவே சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள்யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.