மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-06 16:51 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே கம்மாபட்டி கிராமத்தில் ராஜ் என்பவரின் மகன் ரெஜினால்ட் சாலமோன் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். இங்கு அவர்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு சுவருக்கு நேற்று ரெஜினால்ட் சாலமோன் தண்ணீர் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவர்கள் மழைநீரில் நனைந்து உள்ளது. அதில் மின்வயர்களும் இருந்துள்ளன. இந்த நிலையில் ரெஜினால்ட் சாலமோன், சுவரில் தண்ணீர் அடித்தபோது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து ரெஜினால்ட் சாலமோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு   அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்