நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குன்னம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்
பள்ளி மாணவன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி-பிரேமா தம்பதியர். பாலாஜி சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். பாலாஜிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகன் பாரதிராஜ்(வயது 14). இவர் கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தார். தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் பாரதிராஜ் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பாரதிராஜ் வீட்டில் உள்ள மாட்டை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார்.
குட்டையில் மூழ்கினான்
அப்போது சின்னவெண்மணியிலிருந்து பெரிய வெண்மணி செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான குட்டை உள்ளது. அந்த குட்டையில் விவசாய பயன்பாட்டிற்காக மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் பள்ளமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் அதில் நீர் நிரம்பியது. அதனால் அந்த குட்டை சேறும் சகதியுமாக இருந்தது. இதை அறியாத பாரதிராஜ் மாட்டை மேய்த்து விட்டு குளிப்பதற்காக அந்த குட்டைக்கு சென்றார். அங்கு சேறும் சகதியுமாக இருந்ததால் நீச்சல் தெரியாத பாரதிராஜ் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.
அங்கு தூரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பார்த்து அந்தப் பக்கமாக சென்றவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
சாவு
அதன்பேரில் அவர்கள் குட்டையில் மூழ்கிய பாரதிராஜை தூக்கினர். அப்போது அவர் உயிரிழந்து சடலமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையத்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் உறவினர்கள் பாரதிராஜ் உடலை வீட்டிற்கு தூக்கி சென்றனர். இதை அறிந்த குன்னம் போலீசார் பாரதிராஜ் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு பாரதிராஜ் உடலை மீட்டது அறிந்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாரதிராஜ் தாயார் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலை பகுதிக்கு செல்லாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.