சங்கராபுரம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை 21 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சங்கராபுரம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 21 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது
சங்கராபுரம்
3 பேர் மயக்கம்
சங்கராபுரத்தில் நேற்று முன்தினம் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட 3 பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், உணவு பாதுகாப்பு அலுவலர்(பொறுப்பு) கதிரவன் ஆகியோர் சங்கராபுரம் மற்றும் தேவபாண்டலத்தில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சங்கராபுரத்தில் தனியார் ஓட்டலுக்கு சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டி வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதே போல் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, பூட்டை சாலை, திருக்கோவிலூர் சாலை, தேவபாண்டலம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
9 கிலோ பாலித்தீன் பை
இதில் கெட்டுப்போன 21 கிலோ இறைச்சி, தடைசெய்யப்பட்ட 9 கிலோ பாலித்தீன் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 5 லிட்டர், காலாவதியான 38 கிலோ மாவு மற்றும் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள், 30 கிலோ அயோடின் இல்லாத உப்பு பாக்கெட் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோவன், பத்மநாபன், அன்பு பழனி, மோகன், கொளஞ்சி, சப்-இன்ஸ்பெக்டர் திருமால், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.