திருச்செந்தூரில் கலெக்டர் ஆய்வு
திிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கந்தசஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகள், மருத்துவ முகாம், அன்னதான மண்டபம். சூரசம்ஹாரம் நடக்கக்கூடிய கடற்கரைப்பகுதி, கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்னதானம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம்.
கோவில் மூலம் வழங்கப்படும் அன்னதானத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சுகாதார வளாகங்கள் சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கவுண்ட்டர்
மேலும் தற்காலிகமாக 4 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகிறார்கள். முகாமில் பக்தர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடவும், கொரொனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே கோவிலில் அனைத்து ஆகம விதிகளையும் கடைபிடித்து சூரசம்காரம் நிகழ்ச்சியை கோவில் கடற்கரை பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலை போன்று பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அமர்ந்து எளிய முறையில் தரிசனம் செய்வதற்கு காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்களுக்கு இருக்கைகள், எல்.இ.டி. டி.வி., மின்விசிறி போன்ற வசதிகளும் உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிகளுக்காக ரூ.100, ரூ.250 கட்டண தரிசனம் செய்வதற்கு, டிக்கெட் பெற கூடுதல் கவுண்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறநிலையதுறை அமைச்சர், ஆணையர் வழிகாட்டுதலில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தாசில்தார் சாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், சுமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் வைரமுத்து, செல்வலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.