ஆறு, குளங்களில் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - தீயணைப்பு அலுவலர் பேட்டி
ஆறு, குளம் போன்ற நீர்நிலைப்பகுதியில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறினார்.
தூத்துக்குடி:
ஆறு, குளம் போன்ற நீர்நிலைப்பகுதியில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறினார்.
பார்வையிட்டார்
தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நேற்று உயிர்மீட்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணித்துறை அலுவலர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ேமலும் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தயார் நிலையில் உபகரணங்கள்
தீயணைப்பு-மீட்பு பணித்துறை இயக்குனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் ஆலோசனைப்படி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரைப்படி வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள ஏதுவான நடவடிக்கைகள் எனது தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் 12 நீர் இறைக்கும் பம்புகள், என்ஜினுடன் கூடிய 5 படகுகள், 160 உயிர் காக்கும் மிதவைகள், 160 லைப் ஜாக்கெட்டுகள், மணிலா கயிறு மற்றும் நைலான் கயிறுகள் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது.
அவசர உதவிக்கு...
புயல், மழை, பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பெரும் அழிவுகளை குறைத்திடவும், உயிரை பாதுகாத்திடவும் பொதுமக்கள் அவசர உதவிக்கு 101 மற்றும் 112 என்ற எண்களை தொடர்புகொள்ள வேணடும்.மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு-மீட்பு பணி நிலையங்களின் எல்கைக்குட்பட்ட பகுதியில் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளாக 13 இடங்களும், மிதமாக பாதிக்கப்படும் பகுதிகளாக 11 இடங்களும், குறைந்த அளவு பாதிக்கப்படும் பகுதிகளாக 12 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பயிற்சிகள்
இந்த இடங்களிலுள்ள பொதுமக்கள் மழை வெள்ள அபாய காலத்தில் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த ஒத்திகை பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் 180 இடங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினருடன் இணைந்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 53 தன்னார்வ தொண்டர்களுடன் 221 அலுவலர்கள் மற்றும் பணியார்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தவிர்க்க வேண்டும்
பருவமழையினால் ஏற்படவுள்ள இயற்கை பெருஞ்சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தீயணைப்பு-மீட்பு பணித்துறை வீரர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு-மீட்புப்பணிகள் துறை வழங்கும் அறிவுரைகளை தவறாது கடைபிடித்து பாதுகாப்பாகவும், கவனமுடனும் இருக்க வேண்டும்.
குறிப்பாக பொதுமக்கள் மழைவெள்ளம் பெருக்கெடுத்து வரும் நீர்நிலைகளுக்கு செல்வதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். அதோடு வெள்ளநீர் பெருக்கெடுத்து வரும் ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைப்பகுதிகளில் அபாயத்தை உணராமல் அப்பகுதிகளில் நின்று செல்பி போன்றவற்றை எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்திடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட உதவி அலுவலர் முத்துபாண்டியன், தூத்துக்குடி நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.