வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்;
வால்பாறை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறையில் குவிந்தனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தீபாவளி அன்று அனைவரும் தங்களது வீடுகளில் பண்டிகையை கொண்டாடி விட்டு நேற்று முன்தினமும் முதல் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இதனால் வால்பாறையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
100-க்கும் மேற்பட்டவர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வால்பாறையில் வந்து குவிந்தனர். மேலும் இயற்கை அழகுகளை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர். மேலும் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக சமவெளியில் இருந்து வந்தவர்களுக்கு வால்பாறையில் ஆங்காங்கே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளை பார்த்ததும் ஆர்வம் மிகுதியில் ஆறுகளில் தடைசெய்யப்பட்ட இடங்களில் இறங்கி குளிக்கத் தொடங்கினர்.
தாறுமாறாக நின்ற வாகனங்கள்
வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு போலீசார் தடைவிதித்திருந்தாலும் ஆற்றின் கரையோரமாக இறங்கி சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கூழாங்கல் ஆற்று பகுதியில் குளிப்பதற்கு முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்த பகுதியில் கூட தடையை மீறி குளிக்கத் தொடங்கினர். போலீசார் கண்டித்தும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் கூழாங்கல் ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப்பணி நீடித்தது.
போலீசார் திணறல்
இதேபோல் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வால்பாறையில் போதிய போலீசார் இல்லாமல் போனதால் முழுமையாக போக்குவரத்தை சரி செய்யமுடியாமல் போலீசார் திணறினார்கள். மேலும், சுற்றுலா தலங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யமுடியாமல் போனது.
கொரோனா காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி போலீசார் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் இந்த பணி நடந்தது.
வால்பாறைக்கு சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமாக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்். இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் வெளியூர் போலீசார்களையும் இந்த பணியில் நியமிக்க வேண்டும்.
அதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் போது கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.