உரிமம் இல்லாமல் செயல்பட்ட58 மதுபான பார்கள் மூடல்
உரிமம் இல்லாமல் செயல்பட்ட58 மதுபான பார்கள் மூடல்;
பொள்ளாச்சி
உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக 58 மதுபான பார்களை மூடி டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மதுபான பார்கள்
கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர பகுதியில் 41 மதுபான கடைகளும், புறநகர் பகுதியில் 74 கடைகளும் சேர்த்து மொத்தம் 135 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுக்கடைகளில் அருகில் மதுபான பார்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஏலம் நடத்தி பார்கள் நடத்த உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள், மதுபான பார்கள் மூடப்பட்டன.
இதற்கிடையில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கவில்லை. கடந்த 1-ந்தேதி முதல் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து மதுபான பார்களை நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பார்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் பெரும்பாலான மதுபான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக புகார் வந்தது.
58 பார்கள் மூடல்
இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீசு அனுப்பி, உடனடியாக உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் தெரிவித்த காலக்கெடுவிற்குள் பார்களுக்கு உரிமம் பெறவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பார்களை அதிகாரிகள் மூடினர். இதனால் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை தெற்கு மாவட்ட பகுதியில் 135 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளுக்கு அருகில் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 113 மதுபான பார்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி மதுபான பார்கள் மூடப்பட்டன. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் கடந்த 1-ந்தேதி முதல் பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் 58 மதுபார்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பணத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உரிமம் பெற்ற பிறகு மதுபான பார்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.