பழங்குடியின ஆராய்ச்சிக்காக சிறப்பு நூலகம்
ஊட்டியில் பழங்குடியின ஆராய்ச்சிக்காக சிறப்பு நூலகம் தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.;
ஊட்டி
ஊட்டியில் பழங்குடியின ஆராய்ச்சிக்காக சிறப்பு நூலகம் தொடங்கப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மைய நூலகம்
ஊட்டியில் மாவட்ட மைய நூலகம் உள்ளது. இதன் கீழ் 54 கிளை நூலகங்கள், 29 ஊர்ப்புற நூலகங்கள், 19 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 103 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மைய நூலகத்தில் 18,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா பரவல் குறைந்ததால் வாசகர்கள் அமர்ந்து புத்தகங்களை படிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அங்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் இலவச பயிற்சி பெறவும், பழங்குடியின மக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த சிறப்பு நூலகம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
வாழ்க்கை முறை
முதல் தளத்தில் நீலகிரியில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், இருளர், காட்டு நாயக்கர், குறும்பர், பளியர் ஆகிய 6 இனங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளது. மேல்தளத்தில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்தகங்களை படிக்க மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட மைய நூலக அதிகாரி ஜோதிமணி கூறியதாவது:-
சிறப்பு நூலகத்தில் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்கிறவர்களுக்காக புகைப்படங்கள், புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்த்து தகவல்களை சேகரித்துக்கொள்ளலாம். இதற்காக கணினி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
வாட்ஸ்-அப் குழு
இது தவிர டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-4, நீட், வங்கி, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கு தயாராக நூலகத்துக்கு வந்து புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
ஒவ்வொரு தேர்வுக்கும் ஏற்ப புத்தகங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட மைய நூலகம் மூலம் கல்வி, வேலைவாய்ப்புக்காக தனியாக வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்கப்பட்டு, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான கேள்விகள், முக்கிய தகவல்கள் போன்றவை அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குழுவில் 220 பேர் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.