கடமலைக்குண்டு அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த தார்சாலை
கடமலைக்குண்டு அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தார்சாலை சேதமடைந்தது.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூரில் தேனி பிரதான சாலையின் ஓரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதனை சீரமைக்க தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிக அளவில் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சாலை சேதமடைந்து குழி ஏற்பட்டுள்ளது. இந்த குழியில் தினமும் மோட்டார்சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இறங்கி விபத்தில் சிக்குகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு வருசநாடு பகுதியில் இருந்து வந்த கார் இந்த குழியில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொம்புக்காரன்புலியூரில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.