தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:-
தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே அருந்தவம்புலம் கடைத்தெருவில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார். அங்கு உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடைபெற்றது.
2020-2021-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு ஆய்வில் உள்ளதாக தெரிவித்துள்ள பன்னத்தெரு, நீர்முளை வருவாய் கிராமங்களுக்கு முழுமையாக பயிர்க்காப்பீடு தொகை வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்டும் குறைந்த சதவீதம் காப்பீடு அறிவித்துள்ள வருவாய் கிராமங்களுக்கு இழப்பீட்டுக்கு ஏற்ப கூடுதலாக பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
பேச்சுவார்த்தை
விவசாய சங்க நிர்வாகிகள் வேணு காளிதாசன், ஜோசப், சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குவளை தாசில்தார் சிவக்குமார், வேளாண்மை துறை துணை அலுவலர் வேதரத்தினம், உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், காப்பீட்டுத் துறை மாவட்ட அலுவலர் வீரசெம்மலர், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குளறுபடிகளை நீக்கி பயிர்க்காப்பீட்டு தொகையை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.