நாகை பகுதியில் வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிகால்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
நாகை பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் வடிகால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
வெளிப்பாளையம்:-
நாகை பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் வடிகால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
டெல்டாவில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், நாகூர், திட்டச்சேரி, திருமருகல், கீழையூர், திருப்பூண்டி, திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதேபோல் சம்பா பயிர்கள் 5 நாட்களாக தண்ணீரில் மூழ்கியும், தண்ணீர் வடிய வழியின்றி தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது.
வடிய வைக்கும் பணி
இந்த நிலையில் நேற்று காலை முதல் கருமேகங்கள் கலைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் விவசாயிகள் ஆர்வமாக வயல்வெளிகளுக்கு சென்று தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட தொடங்கினர்.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகைக்கு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் நாகையில் உள்ள ஓடம்போக்கி, தேவநதி, வெட்டாற்றில் வடிந்து ஓடுகிறது. இந்த நிலையில் நாகை வயல் வெளியில் தேங்கி உள்ள மழைநீர் வடிவதற்குள் மற்ற மாவட்டங்களில் உள்ள தண்ணீர் இந்த ஆறுகளில் சேர்ந்து விடுகிறது.
வடிந்து செல்ல நடவடிக்கை
இதனால் நாகை பகுதி வயல்களில் உள்ள தண்ணீர் வடிவதற்கு காலதாமதம் ஆகிறது. முன்பெல்லாம் 2 நாட்களில் வடியும் தண்ணீரானது தற்போது ஒரு வாரத்துக்கு மேலாகியும் வடிவதில்லை. எனவே மேலகோட்டை வாசல்படி முகத்துவார பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, வடிகால்களை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீர் எளிதில் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.