கடுமையான போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
குடியாத்தம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தரைப்பாலம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. இப்பகுதியில் உள்ளவர்கள் அப்பகுதிக்கு செல்ல காமராஜர் பாலம் உள்ளது.
மற்றொருபுறம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களில் தான் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூரிலிருந்து வரும் வாகனங்களும் பயன்படுத்தவேண்டும். வேறு வழி இல்லை.
அதேபோல் ஆற்றின் வழியே ஆங்காங்கே சிறு வழிகள் உள்ளது.
மோர்தானா அணை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிரம்பி வழிவதால் கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் சென்றால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து ெநரிசல்
தற்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்வதால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை.
கனரக வாகனங்கள் மட்டுமே செல்கிறது. இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுன முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது. பல சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி பெரியார் சிலை அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
சுமார் 75 நிமிடம் சாதாரண காவலர் போல் அவர் சாலை நடுவே நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு உடனடியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.