மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியர் பலி
வேலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.;
வேலூர்
வேலூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம் தாலுகா சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 51). இவர் வேலூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
இதையொட்டி அவர் வேலூர் அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட சதாசிவம் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீபுரம் அருகே ஊசூர் -வேலூர் சாலையில் வந்தபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க சதாசிவம் உடனடியாக மோட்டார் சைக்கிளின் பிரேக்கை பிடித்து வேகத்தை குறைக்க முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில், சதாசிவத்தின் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சதாசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துபோன சதாசிவத்துக்கு மணிமேகலை (45) என்ற மனைவியும், ஹரிஸ் (17) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.