வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
காங்கேயத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி காங்கேயத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் என்று வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க விவசாயிகள் அறிவித்தனர்.
வெள்ளகோவில் விவசாயிகள்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீரை வழங்காததால் விவசாயிகள், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அன்று இரவு முழுவதும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலேயே சமையல் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். 2-வது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதைத்தொடர்ந்து அத்துமீறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் 60 பேர் மீது பொதுப்பணித்துறை சார்பில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை தோல்வி
ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின்போதும் காங்கேயம், வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் வருவதில்லை எனக்கூறி பல்வேறு கட்ட போராட்டத்தை விவசாயிகள் நடத்தினார்கள். பி.ஏ.பி. வாய்க்காலில் நடைபெறும் நீர் திருட்டை கண்டுகொள்ளாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாய் அருகில் கிணறுகள் வெட்டி தண்ணீர் திருடுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காங்கேயத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வெள்ளகோவில் கிளை வாய்க்கால் நீர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்கள் உள்பட 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தை கைவிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார். தங்கள் போராட்டத்தை கைவிட முடியாது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
போராட்டம்
இதுகுறித்து வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர்பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி கூறும்போது, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி நாளை (இன்று) காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் என்றார்.
---------------