படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு ஆலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 22), இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் வந்து இறங்கி நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஒட முயன்ற ஜெயராமனை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரகடம் போலீசார் ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உடையதாக நாட்டரசன்பட்டு பகுதியை சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன் (22), வசந்த் (21), வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த முத்துவேல் பாண்டி (23), சிபிராஜ் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்:-
கொலை செய்யப்பட்ட ஜெயராமனும் நாங்களும் நண்பர்கள். நாங்கள் ஒன்றாக சேர்த்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். ஜெயராமனுக்கு திருமணம் ஆகிவிட்டதால் தனியாக பிரிந்து சென்றுவிட்டார்.
பின்னர் நாங்கள் ஜெயராமனை எங்களுடன் வருமாறு பலமுறை அழைத்தோம் ஆனால் ஜெயராமன் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்து எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயராமனுக்கும் எங்களுக்கும் தகராறு இருந்து வந்தது.
இதனால் ஜெயராமனை தீர்த்துகட்ட நாங்கள் முடிவு செய்தோம் இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை வெட்டி படுகொலை செய்து விட்டோம் என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.