அரசு வேலை வாங்கி தருவதாக உலாவரும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தேடுதல் வேட்டை

அரசு வேலை வாங்கி தருவதாக உலாவரும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தேடுதல் வேட்டை நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update: 2021-11-06 05:09 GMT
திருவள்ளூர்,

படித்து முடித்த பின் ஏதேனும் ஒரு அரசு வேலையில் சேருவது என்பது பெரும்பாலான இளைஞர்களின் தலையாய குறிக்கோளாக உள்ளது. அதற்காக பல இளைஞர்கள் பல ஆண்டு காலம் இரவு பகலாக கடுமையாக படித்து தமது விருப்பு வெறுப்புகளை தவிர்த்து முறையான வழியில் அரசு வேலை பெற முயன்று வருகிற அதே வேளையில் சில இளைஞர்கள் தாமாகவோ அல்லது அவர்களது பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரிலோ, குறுக்கு வழியில் அரசு வேலை பெற முயல்கின்றனர்.

அவர்களின் அந்த அரசு வேலை மோகத்தை சில மோசடி பேர்வழிகள் தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொண்டு, அவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மற்ற பிற சமூக வலைத்தளங்கள் வாயிலாக இனம் கண்டு அவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் செயல் தற்போது சமூகத்தில் அதிகமாக காணப்படுகிறது.

இவ்வாறு குறுக்கு வழியில் அரசு வேலை பெற பணம் கொடுத்து ஏமாந்த பலர் சமூகத்தில் தமது கவுரவத்தை எண்ணி புகார் கொடுக்க முன் வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறான மோசடி பேர்வழிகளை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் அவர்கள் மேன்மேலும் பல நபர்களிடம் மோசடி செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விடுவார்கள்.

எனவே இவ்வாறான அரசு வேலை வாங்கி தருவதாக உலாவரும் மோசடி பேர்வழிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம் கிளீன் அப் என்னும் சிறப்பு தேடுதல் வேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான பேர்வழிகளிடம் ஏமாற்றப்பட்ட நபர்கள் அது பற்றி உடனடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து மோசடி பேர்வழிகள் கைது செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் நேரடியாக வந்து புகார் அளிக்க இயலாத நபர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பிரத்யோக தொலைபேசி எண் 6379904848-ஐ தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இளைஞர்கள் தங்களது சீரிய முயற்சியினாலும் கடும் முயற்சியின் மூலமாகவும் தங்களது தகுதி திறமையின் அடிப்படையில் முறையான வழியில் அரசு வேலை பெற வேண்டும் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைக்காட்டி மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என்று பெற்றோர்களும், அவர்களது பிள்ளைகளை தவறான வழியில் வழி நடத்த வேண்டாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்