திருவள்ளூர் அருகே ஏரி நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பில் மோதல்; 20 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே ஏரி நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவன். இவரது மகன் மகேந்திரன் (வயது 32). நேற்று முன்தினம் மகேந்திரனின் உறவினர்களான அரிகிருஷ்ணன், ராகவன், பாலாஜி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த், வெங்கடேசன், முருகேசன், சுபாஷ், திருவேங்கடம் உள்பட 15 பேர் ஏரி நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த அரிகிருஷ்ணன், ராகவன், பாலாஜி ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டு்க்கட்டையாலும், இரும்புகம்பியாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் மேற்கண்ட 3 பேரையும் வெட்டி விட்டு வீட்டில் இருந்த ஜன்னல் மற்றும் மின்சாதன பொருட்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றனர்.
பதிலுக்கு மகேந்திரன் அவரது உறவினர்களான பாலாஜி, அரிகிருஷ்ணன், மகேந்திரன் மணி உள்பட 5 பேர் சுபாஷ் வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த சுபாஷ், ஆனந்த், மோகன் ஆகியோரை உருட்டுக்கட்டையாலும், கையாலும் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த சுபாஷ், ஆனந்த், மோகன் ஆகியோர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.