மகன்களுடன் சேர்ந்து கால்வாயை தூர்வாரிய தொழிலாளி, சேற்றில் சிக்கி சாவு
மகன்களுடன் சேர்ந்து கால்வாயை தூர்வாரிய தொழிலாளி, சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பலியானார்.
திருவிக நகர்,
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 50). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு பாலாஜி, சரவணன், சரண்ராஜ் என 3 மகன்கள் உள்ளனர்.
மழை காலத்தில் இவர்களது வீட்டு அருகே உள்ள கால்வாயில் தேங்கும் குப்பைகளால் தண்ணீர் செல்ல முடியாமல் இவர்களது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் முத்து அவ்வப்போது அந்த பகுதியில் மட்டும் கால்வாயை தூர்வாருவது வழக்கம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அந்த கால்வாயில் தற்போது இடுப்புக்கு மேல் தண்ணீர் செல்கிறது. ஆனால் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்ததால் நேற்று முன்தினம் இரவு முத்து தனது மகன்கள் பாலாஜி, சரவணன் ஆகியோருடன் கால்வாய்க்குள் இறங்கி குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முத்து, கால்வாயில் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். இதற்கிடையில் தந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவரது மகன்கள், புளியந்தோப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வியாசர்பாடி தீயணைப்பு நிலைய அதிகாரி பால்நாகராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கால்வாய்க்குள் இறங்கி முத்துவை தேடினர். இரவு நேரம் என்பதாலும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாகவும் முத்துவை கண்டுபிடிக்க முடியாமல் தேடும் பணியை கைவிட்டனர்.
நேற்று காலை மீண்டும் கால்வாய்க்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், சேற்றில் சிக்கி இருந்த முத்துவின் உடலை மீட்டனர். புளியந்தோப்பு போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.