‘தினத்தந்தி’ புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-05 22:14 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
சாலை சீரமைப்பு 
தென்காசி மாவட்டம் புளியரையைச் சேர்ந்தவர் ஜமீன். இவர் அங்குள்ள தட்சிணாமூர்த்தி நகர் முதலாவது வலது தெருவில் மழைநீருடன், கழிவு நீர் சேர்ந்து வருவதாகவும், சாலைகள் மோசமாக உள்ளதாகவும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கு புளியரை பஞ்சாயத்து நிர்வாகம் சாலையை சரிசெய்து உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, ஆர்.டி.ஓ. அலுவலக சந்திப்பு சாலையில் மாடுகள் சாலையை பறித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. இதேபோல் ரெட்டியார்பட்டி சாலையிலும் மாடுகள் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுந்தர், நெல்லை.
பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் கொத்தாள வீராசாமி கோவில் முன்பு மழை பெய்து சேறும், சகதியுமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கோவில் ஊரின் நடுவில் அமைந்தால் நான்கு முக்கு சந்திப்பாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு அங்குள்ள கீழ் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவில் வரைக்கும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெக்கான், கீழக்கலங்கல்.
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழைகாலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் கிடக்கும். இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர் கதையாகவே உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக  வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கண்ணுசாமி, செங்கானூர்.
தெரு விளக்கு எரியுமா? 
கடையத்தில் இருந்து சேர்வைக்காரன்பட்டி செல்லும் பாதையில் உள்ள தெருவிளக்கு சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
கணேசன், கடையம்.
சாலை வசதி வேண்டும் 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் ஒரு தியேட்டர் புறம் உள்ள பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் தியேட்டருக்கு கீழ்புறம் உள்ள சாலையானது மழைநீரில் அடித்து செல்லப்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீரும் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி, வாறுகால் வசதி ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்கிறேன். 
கல்பனா, கோவில்பட்டி.
தெருவில் தேங்கிய மழைநீர்
சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை பஞ்சாயத்து வடக்கு பன்னம்பாறை கிழக்கு தெருவில் சமீபத்தில் பெய்த மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சரள் மணல் போட்டு மழைநீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேலும் அங்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 
கோமதிநாயகம், பன்னம்பாறை.
மேம்பாலம் அமைத்து தரப்படுமா?
ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் வழியாக மிளகுநத்தம், அய்யர்பட்டி, முத்துக்குமாரபுரம் ஆகிய மக்கள் எப்போதும் வென்றான், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். ஆனால் இந்த வழியாக எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்தில் இருந்து கல்லாற்றின் ஓடையில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்கு மேம்பாலம் அமைத்து கொடுத்தால் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும். 
குேபந்திர பெருமாள், முள்ளூர்.

மேலும் செய்திகள்